Connect with us

திமுக அரசின் மிரட்டல்களுக்கு பா.ம.க ஒருபோதும் பணியாது – கொந்தளித்த அன்புமணி..!!

Featured

திமுக அரசின் மிரட்டல்களுக்கு பா.ம.க ஒருபோதும் பணியாது – கொந்தளித்த அன்புமணி..!!

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? திமுக அரசின் மிரட்டல்களுக்கு பா.ம.க. ஒருபோதும் பணியாது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்நாட்டில் பொதுமக்களையும், தொழில் துறையினரையும் கடுமையாக பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்தியதற்காக என் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதும் சென்னை மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. திமுக அரசின் தூண்டுதலில் சென்னைக் காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த அடக்குமுறையும், பொய்வழக்கு பதிவும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு கடந்த 15-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளே அதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. அந்தப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் பி.கே.சேகர் சென்னை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் திரு.சங்கரலிங்கம் என்பவரிடம் மனு அளித்தார். அதை ஆய்வு செய்த காவல்துறை வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டடம் நடத்திக் கொள்ள வாய்மொழியாக அனுமதி அளித்தது. அதன்படி தான் அங்கு போராட்டம் நடத்தப்பட்டது.

எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடத்துவதற்காக காலை முதலே தொண்டர்கள் கூடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுக்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்க வந்த என்னிடமோ, பிற தலைவர்களிடமோ போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறவில்லை. மாறாக, போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்தனர். இத்தகைய சூழலில் போராட்டம் முடிவடைந்த பிறகு அனுமதியின்றி போராடியதாக வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் நான் பேசினேன். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு, இன்னும் செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்து ஆதாரங்களுடன் விளக்கினேன். அவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பா.ம.க.வினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்ய திமுக அரசு தூண்டியுள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையும் அதை அப்படியே செயல்படுத்தியுள்ளது.

See also  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 2021-22ஆம் ஆண்டில் 1558 படுகொலைகள், 2022-23ஆம் ஆண்டில் 1596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன. இவற்றை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார். 2023-24 ஆம் ஆண்டில் 1600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்க முடியவில்லை.

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. சந்துக் கடைகள் எனப்படும் சட்ட விரோத மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறாக, மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்குப் பதிவு செய்கிறது திமுக அரசு.

பா.ம.க. நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி. அடக்குமுறைகளை சந்தித்து வளர்ந்த கட்சி. இத்தகைய பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது. மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்தும் அறவழியில் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். சென்னையில் போராட்டம் நடத்தியதற்காக காவல்துறை தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top