Connect with us

“ஆன்லைன் ரம்மியால் பலியாகும் உயிர்கள்” மக்களைக் காக்க அரசுக்கு மனமில்லையா..? – ராமதாஸ் காட்டம்..!!

Featured

“ஆன்லைன் ரம்மியால் பலியாகும் உயிர்கள்” மக்களைக் காக்க அரசுக்கு மனமில்லையா..? – ராமதாஸ் காட்டம்..!!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 15 உயிர்கள் பலியான பிறகும் மக்களைக் காக்க அரசுக்கு மனம் வரவில்லையா? என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தனியார் நிறுவன மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சத்திற்கும் கூடுதலான பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியார் நிறுவன மேலாளரான கிருஷ்ணமூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். தமது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஆன்லைனில் சூதாடி ரூ.15 லட்சத்தை இழந்த அவர், கடுமையான குற்ற உணர்விலும், மன உளைச்சலிலும் தவித்திருக்கிறார்; மன உளைச்சல் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத நிலைக்கு சென்றதால் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் அடிமையாக்கி அழிக்கும் என்பதற்கு அங்கமுத்து தான் மோசமான எடுத்துக்காட்டு

ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு ஆகும். நிலத்தில் வெட்ட வெட்ட முளைக்கும் களைகளைப் போல, ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய, தடை செய்ய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும், மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 9 மாதங்களில் மொத்தம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாக இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 9 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

, உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் கூட, ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விசாரணைக்கு கொண்டு வரவோ, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

See also  பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்..!!

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாட்டு மக்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருந்தால், இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top