Connect with us

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

India vs England Test Match

Sports

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.

முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து 209 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர் மற்றும் ரெஹான் அகமது தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி பும்ராவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி அதிகபட்சமாக 76 ரன்களும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து அதிகபட்ச முன்னணியுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷுப்மன் கில் 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்கு பிறகு மூன்றாவது இடத்தில் களமிறங்கி இந்த போட்டியில் சதமடித்து 104 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் டோம் ஹார்ட்லி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 399 ரன்கள் எனும் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தால் 10 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி இதிலும் சிறப்பாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார்.

இந்திய தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றியுடன் சமமாக உள்ள நிலையில், மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15 அன்று தொடங்க உள்ளது.

More in Sports

To Top