Connect with us

இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

Featured

இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டுகள் பிரதமராக பெற்றதற்கு ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல்களில் வாக்குறுதிகளை கொடுத்தும், புல்வாமா, பாலகோட் தாக்குதலை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடியதைப் போல, 2024 மக்களவை தேர்தலில் பெற முடியாது என்கிற நிலையில் ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கூறி வருகிறார். தாம் விடுத்த சவால்களுக்கு 9 நாட்களாகியும் காங்கிரஸ் கட்சி பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி அடிப்படை புரிதல் இல்லாமல் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த நரேந்திர மோடி பேசுவது மிகுந்த வியப்பை தருகிறது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 15-இன்படி எந்தவொரு குடிமகனையும் மதம், இனம், சாதி அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற அபத்தமான வாதத்தை பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அரசமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடு மதத்தின் அடிப்படையில் வழங்க முடியாது.

சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ளவர்களின் நிலையை ஆய்வு செய்து பல்வேறு ஆணையங்கள் வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. முஸ்லிம் சமுதாயத்தினரின் பின்தங்கிய நிலை குறித்து 2005-இல் அமைக்கப்பட்ட ராஜேந்தர் சச்சார் குழுவும், 2007-இல் அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவும் வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிற 4 சதவிகித உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு பிறகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை இட்டுக்கட்டி பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்தப் பிரச்சாரத்தை செய்வதற்கு உளவுத் துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கைதான் காரணமாகும். அதன் காரணமாகவே மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரச்சாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

இத்தகைய மலிவான, பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டுகாலம் பிரதமராக பெற்றதற்கு ஒவ்வொரு இந்தியரும் தலை குனிய வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியை வெறும் ஆட்சி என்கிறார் மோடி. ஆனால், தமது 10 ஆண்டுகால ஆட்சி தேசத்துக்கான சேவை என்கிறார்.

See also  விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

கடந்த 2019 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய போது 2024-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி உலக அரங்கில் ஏழாவது நாடாக கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால், கடந்த 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

2014-இல் 100 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மன்மோகன் சிங் ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சி எட்டப்பட்டது. ஆனால், 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் ரூபாய் 200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைந்திருக்க வேண்டும். ஆனால், 2024 இல் அடைந்ததோ ரூபாய் 173 லட்சம் கோடி தான். மோடி கொடுத்த அறிவிப்பின்படி இருமடங்கு வளர்ச்சி எட்டப்படவில்லை.

5 லட்சம் டிரில்லியன் டாலர் என்று சொன்னால் ரூபாய் 390 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2024 இல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சி பெற்றதோ ரூபாய் 173 லட்சம் கோடி தான். இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வளர்ச்சியை காட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாத பிரதமர் மோடியின் பொருளாதார தோல்வி இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.

இதன்மூலம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. பாதிப்பு, விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்பட்டது, மாநில உரிமைகள் பறிப்பு, மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வெறுப்பு பேச்சு, இதனால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளின் காரணமாக 10 ஆண்டுகால மக்கள் விரோத மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதியாகி வருகிறது.

அனைத்து அஸ்திரங்களும் தோல்வியடைந்த நிலையில் ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை மோடி கூறியிருக்கிறார். விநாச காலே விபரீத புத்தி என்பார்கள். மோடிக்கு விநாச காலம் வந்து விட்டது. அதனால் அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல தலைவர் ராகுல் காந்தியை கண்டு அஞ்சுகிறார்.

கடந்த காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சு சமீபகாலமாக பேசப்படுவதில்லை. ஏனெனில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து கள நிலவரம் பாஜகவுக்கு பாதகமாக இருக்கிறது.

இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.

இத்தகைய பேச்சுகள் பாஜகவின் தோல்வியை நாளுக்கு நாள் உறுதிபடுத்தி வருகிறது. இண்டியா கூட்டணியின் ஆட்சி அமையப் போவது காலத்தின் கட்டாயமாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

See also  பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top