Connect with us

தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் – நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

Featured

தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் – நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் ரேஷன் அரிசிக் கடத்தலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மணல் கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை, கள்ளச் சாராய விற்பனை, புகையிலை கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவை தமிழ்நாட்டில் தற்போது கொடிகட்டி பறக்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஆளும் தி.மு.க.வினரின் ஈடுபாடும், அதற்கு தி.மு.க. அரசு துணைபோவதும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து மட்டும் மாதம் மூன்றரை இலட்சம் கிலோ அளவிற்கு ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துவதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களை வீடு வீடாக அனுப்பி ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்குவதாகவும்,

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் சிறுவர்களை தி.மு.க.வினர் தாக்குவதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒரு சிறுவனுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள வழக்கறிஞர் திரு. மாரிசெல்வம் அவர்கள் எதிர்த்து கேட்டதற்கு, வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இந்த பெட்ரோல் குண்டு தாக்குதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கார்த்திக் என்பவர் தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் உள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் தெரிவிக்கிறார். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திருமதி கனிமொழி அவர்களுடன் கார்த்திக் இருக்கும் புகைப்படம் இன்று பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து தி.மு.க. அரசு அரிசிக் கடத்தலுக்கு எந்த அளவுக்குத் துணைபோகிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணையாக தி.மு.க. அரசு செயல்படுவதாக அப்பகுதி மக்களே தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் தி.மு.க.வினருக்கு அஞ்சி அரசு ஊழியர்களும், காவல் துறையினரும், பொதுமக்களும் செய்வதறியாமல் திகைக்கின்றனர். கடத்தலுக்கு ஊக்கமளிக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்க வேண்டும், அமைதிப் பூங்காவாக திகழ வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்றும், தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரேஷன் அரிசிக் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top